பயண நேரம் 2½ மணி நேரம் குறையும் யஷ்வந்தபுரம்-கார்வார் இடையே புதிய ரெயில் சேவை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்


பயண நேரம் 2½ மணி நேரம் குறையும்   யஷ்வந்தபுரம்-கார்வார் இடையே புதிய ரெயில் சேவை   முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 March 2020 5:15 AM IST (Updated: 8 March 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு யஷ்வந்த புரம்-கார்வார் இடையே புதிய ரெயில் சேவையை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூரு யஷ்வந்தபுரம்-கார்வார் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16595/16596) சேவை தொடக்க விழா யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு கொடி அசைத்து அதன் சேவையை தொடங்கி வைத்தார். இதில் ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி, ஷோபா எம்.பி., தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ.கே.சிங் மற்றும் ரெயில்வேத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய எடியூரப்பா, “இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கி இருப்பதன் மூலம் கடலோர மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கர்நாடகத்தில் அதிக ரெயில்கள் மற்றும் அதிக ரெயில் பாதைகள் தேவைப்படுகிறது. அதனால் ரெயில்வே திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை மாநில அரசு வழங்க தயாராக உள்ளது” என்றார்.

புறநகர் ரெயில் திட்டம்

மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி பேசும்போது, “நாடு முழுவதும் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம், பையப்பனஹள்ளியில் புதிய ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. கர்நாடக மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்” என்றார்.

இந்த ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயங்கும். அந்த ரெயில் (எண் 16595) யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.25 மணிக்கு கார்வார் சென்றடையும்.

இன்னொரு எக்ஸ்பிரஸ்

வழியில் இந்த ரெயில் சிக்கபானவர், ெசன்னராயபட்டணா, ஹாசன், சக்லேஷ்புரா, சுப்பிரமண்யா ரோடு, கன்னிரு, கபகா, புத்தூர், பண்ட்வால், சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாப்புரா, மூகாம்பிகா ரோடு, பைந்தூர், பட்கல், முருடேஸ்வர், ஒன்னாவர், கும்டா, கோகர்ணா ரோடு, அங்கோலா ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் இன்னொரு எக்ஸ்பிரஸ் (எண் 16596) கார்வார்-யஷ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ், கார்வார் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு அது யஷ்வந்தபுரம் வந்து சேரும். வழியில் மேலே குறிப்பிட்டுள்ள ரெயில் நிலையங்களில் நின்று வரும். இந்த ரெயில்களில் ஒரு குளுகுளு வசதி (டயர்-2) கொண்ட பெட்டி, ஒரு குளுகுளு வசதி கொண்ட (டயர்-3) பெட்டி, 2-ம் வகுப்பு பெட்டிகள் -7, 3 பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய ரெயில் சேைவ மூலம் யஷ்வந்தபுரம்- கார்வார் இடையேயான பயண நேரத்தில் 2½ மணி நேரம் குறையும். பெங்களூருவில் இருந்து மைசூரு, ஹாசன் வழியாக இயக்கப்படும் ரெயில்களில் அதிக நேரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஸ்கோடகாமா

கடலோர பகுதி மக்களின் நீண்டநாள் கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த ரெயில் கார்வார் போய் சேர்ந்ததும், அங்கிருந்து காலை 8.30 மணிக்கு வாஸ்கோடகாமாவுக்கு எக்ஸ்பிரஸ் (எண் 06551) புறப்படும். இது முன்பதிவு செய்யப்படாத ரெயில் ஆகும். காலை 10.30 மணிக்கு இது வாஸ்கோடகாமாவுக்கு சென்றடையும். வழியில் அந்த ரெயில் மட்கான், மஜோர்டா ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் (எண் 06552) ரெயில், வாஸ்கோடகாமாவில் பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு கார்வார் வந்து சேரும்.

நவீன பெட்டிகள்

இந்த நிகழ்ச்சியில் யஷ்வந்தபுரம்-விஜயாப்புரா எக்ஸ்பிரசுக்கு நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு அதன் தொடக்க விழாவும் நடைபெற்றது. இதை எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

Next Story