ராஜபாளையத்தில் சிதைந்து போன சாலைகள்


ராஜபாளையத்தில் சிதைந்து போன சாலைகள்
x
தினத்தந்தி 8 March 2020 4:15 AM IST (Updated: 8 March 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் சாலைகள் சிதைந்து கிடக்கும் நிலையில் கோவில் திருவிழாக்களில் சாமி வீதி உலா நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம் திட்டம் என ஒரே நேரத்தில் பணிகள் நடந்ததால் அனைத்து தெருக்களிலும் பிரதான பகுதியிலும் சாலைகள் முழுவதும் சின்னாபின்னமாகி கற்கள் சிதறிக்கிடக்கின்றன. மேடு, பள்ளத்துடன் குண்டும், குழியுமாக சிதைந்து காணப்படுகின்றன. தற்போது திருவிழா காலம் என்பதால் தெருக்களில் சாமி திருவீதிஉலா நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தோண்டிய இடங்களில் சரியாக மூடாமல் பொறுப்பில்லாமல் இஷ்டத்திற்கு பணியாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெருக்கள், சந்துகள், ரோடுகளை நகராட்சி நிர்வாகம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் வரிவசூல் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளனர். மக்கள் படும் வேதனைகளை தெரிந்து கொள்ளவும், அதை சீராக்கவும் வழிவகுக்காமல் கவனக்குறைவாகவே உள்ளனர் என பலரும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

மேலும் பங்குனி, சித்திரை மாதங்கள் கோவில் திருவிழா காலங்களாகும். சாமி, அம்மன் திருவீதி உலா வருவது இந்த சிதைந்து போன தெரு, சந்து, ரோடுகளில் இயலுமா என்று பக்தர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலிலும் தென்காசி ரோட்டில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலிலும் 10 நாட்களும் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

மேலும் மாயூரநாதசுவாமி கோவில் திருவிழா, பழையபாளையம் என்.ஆர்.கே. சித்திரை திருவிழா, திடலில் சித்திரை திருவிழா, தேவேந்திரகுல வேளாளர் வெண்குடை திருவிழா நடைபெறும். இத்தகைய பிரதான திருவிழாவை தவிர ஒவ்வொரு தெருவில் உள்ள குலதெய்வ சாமிகள், அம்மன் திருவிழாக்களும் நடக்க உள்ளன. திருவிழா சமயங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன், சாமி சப்பரம் வீதிகளில் வருவது வழக்கம். ஆனால் தெருக்கள், வீதிகள் சீராக இல்லையே சாமி, அம்மன் திருவீதிஉலா எப்படி வரும், எப்படி நடக்கும் என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் மெத்தனபோக்கை கைவிட்டு இதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story