கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை; பவானி கோர்ட்டு தீர்ப்பு
கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவிக்கு பவானி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
பவானி,
பவானி அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர் மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி என்கிற குமார் (வயது 36). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வளர்மதி (36). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு குமார் வளர்மதியை பிரிந்தார். இதனால் வளர்மதி தன்னுடைய தாய் ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் தன்னுடைய அக்காள் அத்தாயி என்பவரின் மகள் ரூபிணி என்பவரை குமார் 2-வதாக திருமணம் செய்துகொண்டு வளர்மதிக்கு தெரியாமல் பவானி காமராஜபுரம் பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
இதுபற்றி வளர்மதிக்கு தெரிந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி பவானி வந்து கணவரிடம் நியாயம் கேட்டார். மேலும் கணவர் குமாரை தன்னுடன் கிருஷ்ணகிரிக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் செல்ல மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த வளர்மதி அருகே கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து குமாரை தாக்கினார் இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இதுகுறித்து அப்போதைய பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வளர்மதியை கைது செய்தார். மேலும் இந்த வழக்கு பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் விசாரணை முடிந்து நேற்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கணவரை கொன்ற குற்றத்துக்காக வளர்மதிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் வளர்மதி மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வளர்மதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story