பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியிலிருந்து   புழல் ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 8 March 2020 3:45 AM IST (Updated: 8 March 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஆகும். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி தண்ணீர் பெறப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர், தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சராசரியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்ததை கருத்தில் கொண்டு, அக்டோபர் 11-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடுதலாக திறப்பு

பின்னர் டிசம்பர் 12-ந் தேதி பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. அன்று முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 430 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 430 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த 4-ந் தேதி முதல் 330 அடியாக குறைக்கப்பட்டது. அன்று முதல் புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. மேலும், புழல் ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதாவது புழல் ஏரிக்கு வினாடிக்கு 313 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

1,400 மில்லியன் கனஅடி

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 28.42 அடியாக பதிவானது. 1,400 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 183 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Next Story