ரசாயனம் கலந்த மீன் விற்பனையா? அதிகாரிகள் சோதனை
பவானி மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பவானி,
பவானி பகுதியில் பவானி ஆறு, காவிரி ஆறு மற்றும் காலிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 பகுதிகளில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் பவானி, குமாரபாளையம் உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கூறப்பட்டன.
இதைத்தொடர்ந்து பவானியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பவானி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் பவானி மீன்வள ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன்வளத்துறை மேற்பார்வையாளர் அருள்முருகன் ஆகியோர் பவானி மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர் ஆய்வின் போது எந்த மீனும் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மதுரையில் ஒரு சில இடங்களில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மீன் கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்களில் சோதனை நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்’ என்றனர்.
இதேபோல் பவானிசாகர் மீன் விற்பனை நிலையங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
Related Tags :
Next Story