காங்கேயம் அருகே சாராயம் காய்ச்சிய வடமாநில தொழிலாளி கைது


காங்கேயம் அருகே   சாராயம் காய்ச்சிய வடமாநில தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 March 2020 4:02 AM IST (Updated: 8 March 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே சாராயம் காய்ச்சிய வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

காங்கேயம்,

காங்கேயம் அருகே உள்ள பதியாண்டிபாளையம் கிராமத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை பவுடராக தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த தொழிற்சாலை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆலைக்கு பின்புறம் ஒரு கேனில் 3 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 30 லிட்டர் அழுகிய பழங்கள் கொண்ட டிரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

வடமாநில தொழிலாளி கைது

இதையடுத்து சாராயம் தயாரித்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே தொழிற்சாலையில் வேலை பார்த்த பீகாரை சேர்ந்த சனோஷ்குமார்(வயது 40) என்பது தெரிய வந்தது. அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு தெரியாமல் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து விட்டு வேலைக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு விற்பதற்காகவே சனோஷ்குமார் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதையடுத்து சனோஷ்குமாரை போலீசார் கைது செய்து காங்கேயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைத்தனர்.

Next Story