சோதனையான காலகட்டத்தில் தி.மு.க.வை கட்டிக்காத்தவர் அன்பழகன் மறைவுக்கு நாராயணசாமி இரங்கல்


சோதனையான காலகட்டத்தில் தி.மு.க.வை கட்டிக்காத்தவர் அன்பழகன் மறைவுக்கு நாராயணசாமி இரங்கல்
x
தினத்தந்தி 7 March 2020 11:50 PM GMT (Updated: 7 March 2020 11:50 PM GMT)

சோதனையான காலகட்டத்தில் தி.மு.க.வை கட்டிக்காத்தவர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை மரண மடைந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

இதையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் முதுபெரும் தலைவர் அன்பழகன் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனக்கு மிகுந்த துயரத்தையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. தி.மு.க. தொடங்கிய நாளில் இருந்து அடிப்படை உறுப்பினராக இருந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.

சிறந்த நிர்வாகி

அண்ணாவின் வழியில் தன்னுடைய அரசியல் பொதுவாழ்வை ஆரம்பித்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் தி.மு.க. வேரூன்றி வளர அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார். எம்.எல்.ஏ. வாக 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 4 முறை தமிழகத்தின் அமைச்சராக தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். இளம் பருவத்தில் இருந்து முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் உற்ற நண்பர். சோதனையான காலகட்டங்களில் தி.மு.க.வை வலுவான இயக்கமாக மாற்றியவர். சிறந்த நிர்வாகி.

பேரிழப்பு

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அவர் அமைச்சராக இருந்தபோது பல துறைகளை திறமையாக நடத்தியவர். மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்றபோது அவரோடு தோளோடு தோள் கொடுத்து தி.மு.க.வை கட்டிக்காப்பாற்றியது மட்டுமில்லாமல் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறுவதற்கு ஆலோசனை வழங்கியவர்.

அவருடைய இழப்பு தமிழகத்துக்கும், தி.மு.க.வுக்கும் குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கும், பேரிழப்பாகும். அவருடைய ஆன்மாசாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Next Story