ஆவூர், மழையூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,452 காளைகள் சீறிப்பாய்ந்தன; 37 பேர் காயம்


ஆவூர், மழையூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,452 காளைகள் சீறிப்பாய்ந்தன; 37 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2020 11:30 PM GMT (Updated: 8 March 2020 5:54 PM GMT)

ஆவூர், மழையூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த 1,452 காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 37 பேர் காயமடைந்தனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூரில் புனித பெரிய நாயகி மாதா ஆலயத்தில் பாஸ்கா தேர் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை பெரியநாயகி மாதா ஆலயத்தில் ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து ஆலயம் அருகே அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 802 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 314 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். ஒவ்வொரு காளையாக களத்தில் சீறிப்பாய்ந்த போது, பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

21 பேர் காயம்

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், மிக்சி, மின்விசிறி, சில்வர் பாத்திரம், தங்கம்-வெள்ளி நாணயங்கள், சைக்கிள், அயன்பாக்ஸ், வேட்டி போன்ற பரிசுகள் விழா குழுவினரால் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆவூர், சாமி ஊரண்ப்பட்டி கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் கீரனூர், இலுப்பூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

கறம்பக்குடி

இதேபோல் கறம்பக்குடி அருகே மழையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மழையூர் காப்பு முனிகோவில் திடலில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 650 காளைகளை, 170 மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கநாணயம், குக்கர், பீரோ போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மழையூர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story