குடியாத்தம்-சித்தூர் சாலையில் ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது - அதிர்‌‌ஷ்டவசமாக 8 பேர் உயிர்தப்பினர்


குடியாத்தம்-சித்தூர் சாலையில் ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது - அதிர்‌‌ஷ்டவசமாக 8 பேர் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 9 March 2020 3:45 AM IST (Updated: 8 March 2020 11:58 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம்-சித்தூர் சாலையில் ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்‌‌ஷ்டவசமாக 8 பேர் உயிர்தப்பினர்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் ரோடு 2-வது சந்து பகுதியில் வசித்து வருபவர் மாதவன். இவர், அந்த பகுதியில் இரண்டு சக்கர பார்க்கிங் ஸ்டேண்டு நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பாரதி (வயது 60). இவருக்கு மூட்டுவலி உள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு நேற்று 10 மணி அளவில் பாரதி தனது 2 மகள்கள், மருமகள், 3 பேரன்கள் மற்றும் குடியாத்தத்தை அடுத்த மீனூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் ஆகிய 8 பேர் ஆம்னி வேனில் குடியாத்தத்தில் இருந்து சென்றனர்.

குடியாத்தம்-சித்தூர் சாலையில் கல்லப்பாடியை அடுத்த கணவாய் மோட்டூர் பகுதி அருகே ஆம்னி வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென வேனில் இருந்து புகை வந்துள்ளது. உடனே டிரைவர் வெங்கடேசன் கீழே இறங்கி பார்த்துள்ளார். அப்போது ஆம்னி வேனின் அடிப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது.

இதனையடுத்து வேனில் இருந்த அனைவரும் கீழே இறங்கி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆம்னி வேன் முழுவதும் பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரதராமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story