சின்னமோட்டூர் கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


சின்னமோட்டூர் கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 9 March 2020 3:45 AM IST (Updated: 8 March 2020 11:58 PM IST)
t-max-icont-min-icon

சின்னமோட்டூர் கிராமத்தில் நடந்த விழாவில் 60 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல், மகளிர் தின விழா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உறுதிமொழி ஏற்றல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரே‌‌ஷ் திட்ட விளக்க உரை ஆற்றினார். ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி வரவேற்றார். வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சக்திசுபா‌ஷினி உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, 60 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மகப்பேறு நல உதவித் தொகை மற்றும் ஜோலார்பேட்டை வட்டார 90 சுகாதார பெண் பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி பேசினார். கலெக்டர் சிவன்அருள் பார்வையாளர்கள் தங்கும் அறையை திறந்து வைத்து, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.

விழாவில் நாட்டறம்பள்ளி தாசில்தார் உமா ரம்யா, முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமே‌‌ஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமே‌‌ஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் ரெட்டி, முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.ஜி.சுப்பிரமணி, புதுப்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் வெள்ளையன், அரசு மருத்துவர்கள் மீனாட்சி, மனோன்மணி, சுமன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story