மகளிர் தினத்தையொட்டி கோவை-பெங்களூரு ரெயிலை இயக்கிய பெண்கள்


மகளிர் தினத்தையொட்டி கோவை-பெங்களூரு ரெயிலை இயக்கிய பெண்கள்
x
தினத்தந்தி 9 March 2020 12:30 AM GMT (Updated: 8 March 2020 6:32 PM GMT)

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை-பெங்களூரு ரெயிலை இயக்கிய பெண்களுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம்,

உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் பெண்களை கவுரவிக்கும் விதமாக தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ‘அனைவரும் சமம்’ என்ற கருப்பொருளை முன்வைத்து இந்த ஆண்டு தெற்கு ரெயில்வே, மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு வழித்தடங்களில் செல்லும் மின்சார ரெயில்களை, ஆண்கள் இல்லாமல் முழுவதுமாக பெண்களை கொண்டு இயக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்றுமுன்தினம் சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரெயிலை ஆண்கள் இல்லாமல் முழுவதும் பெண்களை கொண்டு இயக்கப்பட்டது.

இந்தநிலையில், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-22666) என்ஜின் டிரைவர்கள், கார்டு, டிக்கெட் பரிசோதகர்கள் என அனைவரும் பெண்கள் என்ற நிலையில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை என்ஜின் டிரைவர்கள் நிம்மி, சிந்து ஆகியோர் இயக்கினர்.

உற்சாக வரவேற்பு

இந்த ரெயிலில் கார்டுகளாக மரினா, காயத்ரி ஆகியோரும், டிக்கெட் பரிசோதகர்களாக சாவித்திரி, மைதிலி, தன்யா, நந்தினி ஆகியோரும் பணியாற்றினர். கோவையில் அந்த ரெயில் புறப்படும்போது, என்ஜின் பெண் டிரைவர்களை பயணிகளும், பெண்களும் உற்சாகப்படுத்தினர். இதையடுத்து அந்த உதய் எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு காலை 7.50 மணிக்கு வந்தது.

அப்போது, அந்த ரெயிலை இயக்கி வந்த பெண்களுக்கு கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், முதுநிலை நிதி மேலாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1,131 பெண் ஊழியர்கள்

சேலம் ரெயில்வே கோட்டத்தில் 1,131 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவற்றில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் 74 பேரும், காப்பாளர்கள் 4 பேரும், ரெயில் நிலைய மேலாளர்கள் 19 பேரும், இயக்க உதவியாளர்கள் 129 பேரும், பொறியியல் துறையில் 294 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 125 பேரும், பணியாளர் பிரிவில் 26 பேரும், கணக்கு பிரிவில் 10 பேரும், முன்பதிவு மற்றும் பயணச்சீட்டு சோதனையாளர்கள் 153 பேர் உள்பட பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். மகளிர் தினவிழாவில் பெண் ஊழியர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர் என்றும், எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கிய பெண் ஊழியர்களுக்கு பயணிகள், பெண்கள் தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story