திருவண்ணாமலை அருகே, முன்விரோத தகராறில் தம்பதி மீது தாக்குதல் - மாமனார், மருமகன் கைது


திருவண்ணாமலை அருகே, முன்விரோத தகராறில் தம்பதி மீது தாக்குதல் - மாமனார், மருமகன் கைது
x
தினத்தந்தி 9 March 2020 3:15 AM IST (Updated: 9 March 2020 12:13 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே முன்விரோத தகராறு காரணமாக கணவன் - மனைவியை தாக்கிய மாமனார், மருமகனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலையை சேர்ந்தவர் கண்ணன், விவசாயி. இவருடைய மனைவி விஜயா. பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கண்ணனுக்கும், அவரது சகோதரர் முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று நிலத்தில் கண்ணன், விஜயா ஆகியோர் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முருகன், அவரது மருமகன் மணிகண்டன் ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக விஜயா கொடுத்த புகாரின் பேரில் முருகன், மணிகண்டன் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோன்று அவர்களது உறவினர் அன்பரசி அங்கு வந்து கண்ணனிடம் இதுபற்றி கேட்ட போது, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அன்பரசி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அன்பரசி கொடுத்த புகாரின் பேரில் கண்ணன் மற்றும் அவரது மனைவி விஜயா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் முருகன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story