வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்


வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
x
தினத்தந்தி 9 March 2020 4:45 AM IST (Updated: 9 March 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள் போராட்டக்காரர்களுக்கு சீக்கியர்கள் உணவு வழங்கினர்.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதை கண்டித்தும் முஸ்லிம்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 24-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. சர்வதேச மகளிர் தினத்தை போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த முஸ்லிம் பெண்கள் கருப்பு நாளாக அனுசரித்தனர். அந்தவகையில் நாடகம், பேச்சுப்போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அதேபோல், முஸ்லிம் பெண்கள் தங்கள் கைகளில் மருதாணியால் (மெஹந்தி) ‘ஜெய்ஹிந்த், நோ சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.’ என்று எழுதி இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அங்கேயே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த போராட்டத்தின் போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மதிய உணவு தயாரித்து கொண்டு வந்து வழங்கினார்கள். இவர்கள் சென்னையில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார்கள். மதிய உணவாக சீரக சோறு மற்றும் பருப்பு குழம்பை அவர்களே பரிமாறினார்கள்.

Next Story