போடியில், தலை துண்டித்து வாலிபர் படுகொலை


போடியில், தலை துண்டித்து வாலிபர் படுகொலை
x
தினத்தந்தி 9 March 2020 3:30 AM IST (Updated: 9 March 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

போடியில் தலை துண்டித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

போடி,

தேனி மாவட்டம் போடியில் பரமசிவன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிரிவல பாதை பகுதியில் நாடக மேடை ஒன்று உள்ளது. நேற்று காலை கிரிவல பாதையில் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் நாடக மேடை அருகில் வந்தபோது, துர்நாற்றம் வீசியது.

இதனையடுத்து நடைபயிற்சி சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது நாடக மேடைக்கு பின்புறம் அழுகிய நிலையில் துண்டிக்கப்பட்ட ஆணின் தலை கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக போடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த தலையை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பரமசிவன் மலைக்கோவில் அருகே துண்டிக்கப்பட்டு கிடந்த தலை, 35 வயது மதிக்கத்தக்க நபருடையதாக இருக்கலாம். அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. தலை மட்டும் இங்கு கிடந்த நிலையில், உடல் எங்கு கிடக்கிறது? என தேடி வருகிறோம். மர்ம நபர்கள் கொலை செய்து, தலையை மட்டும் துண்டாக வெட்டி இந்த நாடக மேடை பின்புறம் போட்டுவிட்டு சென்றார்களா? என விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

ஏற்கனவே கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு இதே கிரிவல பாதை பகுதியில், போடி நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணியாளர் செல்வராஜ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மேலும் அவருடைய புதிய மோட்டார் சைக்கிளையும், மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை. இதற்கிடையே தற்போது வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story