சித்தராமையா கொண்டுவந்த ‘ஷாதி பாக்யா’ திட்டத்தை நிறுத்திய எடியூரப்பா கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்


சித்தராமையா கொண்டுவந்த ‘ஷாதி பாக்யா’ திட்டத்தை நிறுத்திய எடியூரப்பா கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 9 March 2020 4:08 AM IST (Updated: 9 March 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா கொண்டுவந்த ‘ஷாதி பாக்யா’ திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நிறுத்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப் படுத்தி உள்ளனர்.

பெங்களூரு,

2020-2021-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட்டை முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 5-ந் தேதி வெளியிட்டார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கொண்டு வந்த ‘ஷாதி பாக்யா’ எனும் சிறுபான்மை சமூகத்தினருக்கான திருமண உதவித்தொகை திட்டத்தை பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை. இதனால் அந்த திட்டத்தை எடியூரப்பா நிறுத்திவிட்டார் என்று தகவல் பரவியது.

அந்த திட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் சமூகத்தில் உள்ள ஏழை, எளிய பெண்களின் திருமணத்துக்காக ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படாததால் பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுபான்மையினர் சமூக இயக்குனரகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் ‘ஷாதி பாக்யா’ திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்களை எதுவும் ஏற்க வேண்டாம் என்றும், 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்த திட்டத்திற்காக 1.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 28,540 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் திருமண உதவித்தொகையும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. தற்போது இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்படாததால், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த காங்கிரஸ் கட்சியில் உள்ள சிறுபான்மை சமூக எம்.எல்.ஏ.க்களான யு.டி.காதர், ஜமீர் அகமது கான், என்.ஏ.ஹாரீஸ், ரிஸ்வான் ஹர்ஷத், தன்வீர் சேட் ஆகியோர் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் சந்தித்து ‘ஷாதி பாக்யா’ திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்திற்கான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்று கோரி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அப்போது அவர்களிடம் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா இதுபற்றி மந்திரிசபை கூட்டத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story