கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
நண்பர்களுடன் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை,
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் 10 பேர் ஒரு குழுவாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் அங்கிருக்கும் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதன்பின்னர், அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்த அவர்கள் கடற்கரை கோவிலுக்கு தெற்கு பக்கம் உள்ள கடலில் அனைவரும் மகிழச்சியுடன் குளித்தனர்.
ராட்சத அலையில் சிக்கினார்
அப்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பி.டெக். முதலாம் ஆண்டு படிக்கும் சைலேஷ்வரராவ் (வயது 20) என்ற மாணவர் ராட்சத அலையில் சிக்கி நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார்.
இதைப்பார்த்த சக மாணவர்கள் நண்பரை காப்பாற்ற கோரி கூச்சலிட்டனர்.
ஆனால் அதற்குள் கடல் அலை உள்ளே இழுத்து சென்றதில் அவர் ஆழமான பகுதிக்கு சென்று மாயமாகி விட்டார்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள மீனவர்கள் சிலர் படகில் கடலுக்கு சென்று மாணவரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
உடல் கரை ஒதுங்கியது
அதன் பின்னர், 3 மணி நேரம் கழித்து அதே பகுதியில் சைலேஷ்வரராவ் உடல் கரை ஒதுங்கியது.
பிறகு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story