நாகையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்


நாகையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 March 2020 5:30 AM IST (Updated: 9 March 2020 11:25 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடல் அட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க நாகை மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் உணவுக்காகவும், பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பதற்காகவும் கடல் அட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தமிழக கடலோர பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கடல் அட்டைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன உயிரினக்காப்பாளர் கலாநிதி தலைமையில் வனச்சரகர் அயூப்கான் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே ஒரு குடோனில், 1 டன் எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதலாவது கடற்கரை சாலையைச் சேர்ந்த செண்பகராமன்(வயது 60), ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சந்திரசேகர்(45) ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ரூ.3 கோடி கடல் அட்டை பறிமுதல்

இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியில் உள்ள ஒரு குடோனிலும் கடல் அட்டைகள் பதப்படுத்தப்படுவதாக தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 1 டன் எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அப்போது அந்த குடோனில் யாரும் இல்லை. இதையடுத்து அங்கு இருந்த கடல் அட்டைகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நாகையில் 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்பிலான 2 டன் எடை கொண்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி

நாகை மாவட்ட வன உயிரினக்காப்பாளர் கலாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடலில் உள்ள அரிய வகை உயிரினமாக கடல் அட்டைகள் காணப்படுகிறது. கடல் அட்டை பிடிக்கப்படுவதால் கடலில் புற்கள், பவளப்பாறைகள் வேகமாக அழியும் நிலை உருவாகும். இதனால் மீன்களின் வளர்ச்சி மற்றும் இனங்கள் குறையும். இது தெரியாமல் சிலர் அதனை சட்டத்துக்கு விரோதமாக பிடித்து வருகின்றனர். கடல் அட்டை மீனவர்களின் நண்பனாக உள்ளது. எனவே கடல் வளத்தையும், மீன்வளத்தையும் பாதுகாக்கும் பொருட்டு கடல் அட்டைகளை யாரும் பிடிக்க வேண்டாம். இதை மீறி பிடிப்பவர்களுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story