விருத்தாசலம் அருகே, பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் - பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு


விருத்தாசலம் அருகே, பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் - பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 March 2020 3:30 AM IST (Updated: 9 March 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்மாபுரம்,

விருத்தாசலம் அடுத்த கீழப்பாளையூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 1965-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

இதையடுத்து இப்பள்ளி, கடந்த 2012-ம் ஆண்டு நடு நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவர்கள் உயர்நிலை படிப்புக்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் அல்லது கம்மாபுரம் சென்று படித்து வருகின்றனர். ஆனால் மாணவிகளை, அவர்களது பெற்றோர் வெளியே படிக்க அனுப்பாமல் பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.

இதன் காரணமாக இப்பள்ளியை உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கீழப்பாளையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி தரும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story