பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்க கூடலூர்- கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு


பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்க கூடலூர்- கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 10 March 2020 3:45 AM IST (Updated: 9 March 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்க கூடலூர்- கேரள எல்லையில் வாகனங்களில் கால்நடை பராமரிப்பு துறையினர் கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.

கூடலூர்,

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் 1,700 கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகளை அழித்தனர். தொடர்ந்து முட்டைகளை தீ வைத்து எரித்தனர். இதேபோல் கண்ணனூர் மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் கோழிகள் உள்ளிட்ட பறவை இனங்களை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் பறவை மற்றும் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கூடலூர்- கேரள எல்லைகளான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல், கக்குன்டி மற்றும் கக்கநல்லா சோதனைச்சாவடிகளில் கால்நடை மருத்துவ குழுவினர் முகாமிட்டு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். நாடுகாணி சோதனைச்சாவடியில் டாக்டர் பாலாஜி தலைமையில் ஆய்வாளர் கமல்பாபு, நெல்லியாளம் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பிரகா‌‌ஷ் உள்பட வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கூடலூர்- கேரள சாலைகளில் சுண்ணாம்பு பவுடரை தூவினர். இதனால் வாகனங்களின் டயர்கள் சுண்ணாம்பு பவுடரில் உருண்டு செல்லும் வகையில் சாலையில் தூவி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை கால்நடை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) நீலவண்ணன் மாநில எல்லைகளில் ரோந்து மேற்கொண்டு ஆய்வு நடத்தினார். இதுகுறித்து கால்நடை டாக்டர் பாலாஜி கூறியதாவது:-

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கோழிகள், காடைகள் உள்ளிட்ட பறவைகள் ஏற்றி கொண்டு தமிழகத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து பறவைகளை ஏற்றி கொண்டு வந்த சில வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பொதுமக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, இருமல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story