மாசிமகத்தை முன்னிட்டு கோலாகலம்: தலசயன பெருமாள் கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


மாசிமகத்தை முன்னிட்டு கோலாகலம்:   தலசயன பெருமாள் கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா   ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 March 2020 4:30 AM IST (Updated: 10 March 2020 12:01 AM IST)
t-max-icont-min-icon

மாசிமகத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்து மகிழ்ந்தனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் திருக்கோவில், 108 வைணவ திருத்தலங்களில் 63-வது தலமாகும். இக்கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஞாயிற்றுகிழமை) இரவு கடற்கரை சாலையில் உள்ள புஷ்கரணி தெப்ப குளத்தில் தலசயன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். அப்போது குளத்தின் நான்கு புற படிக்கட்டுகலில் நின்றிருந்த பக்தர்கள் கற்பூர ஆராதனை செய்து பெருமாளை வழிபட்டனர்.

அதன்பின்னர், நேற்று காலை 9 மணி அளவில் தலசயன பெருமாள் மற்றும் வராக பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் கருட சேவையில் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாளித்தனர்.

தீர்த்தவாரி

அப்போது கடற்கரையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

அதைத்தொடர்ந்து, தலசயன பெருமாளுக்கு புனித நீராட்டு விழா நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர்.

மாசிமகத்தன்று மாமல்லபுரம் கடலில் நீராடினால் காசி, ராமேசுவரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு தலசயன பெருமாள் கோவிில் வளாகத்தில் குலசேகர ஆழ்வார் ராமானுஜர் கூடம் சார்பில் அதன் தலைவர் நெய்குப்பி கிருஷ்ணராமானுஜ தாசர் தலைமையில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தெப்பத்திருவிழா

இந்த மாசிமக தெப்பத்திருவிழா மற்றும் தீர்த்தவாரி திருவிழாவை கண்டு களிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாமல்லபுரம் வந்திருந்தனர்.

இதையொட்டி, மாமல்ல புரம் கடற்கரை மற்றும் புஷ் கரணி தெப்பக்குளம் அருகில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்வடிவேல் முருகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை தலசயன பெருமாள் கோவில் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் என்.ஜனார்த்தனம், கோவில் செயல் அலுவலர் எஸ்.சங்கர் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story