பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைப்பு: கடலில் வீணாக கலக்கும் குடிநீர்


பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைப்பு: கடலில் வீணாக கலக்கும் குடிநீர்
x
தினத்தந்தி 10 March 2020 3:45 AM IST (Updated: 10 March 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைப்பால் கடலில் குடிநீர் வீணாக கலந்து வருகிறது. இந்த உடைப்பை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதே போல் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் மண்டபம் காந்திநகர் அருகே உள்ள குடிநீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து குழாய் மூலமாக ராமேசுவரம் தீவு பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்காக மண்டபம் பகுதியில் இருந்து தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் பாம்பன் ரோடு பாலத்தின் நடை பாதை வழியாக குழாய் பதிக்கப்பட்டு, ராமேசுவரம் பகுதிக்கு காவிரி குடிநீர் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் நடை பாதைகளில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக குடிநீர் நடைபாதையில் ஓடுகிறது.

மேலும் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரின் இடைவெளி வழியாக குடிநீர் வீணாகி கடலில் கலந்து வருகிறது. ரோடு பாலத்தில் அடிக்கடி குழாய் உடைப்பால் இதுபோன்று குடிநீர் கடலில் கலந்து வீணாவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் பல ஊர்களில் குடிநீருக்காக பொது மக்கள் குடங்களுடன் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அலைந்து வருகின்றனர். மேலும் தள்ளு வண்டிகள் மூலம் குடிநீர் சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில், பாம்பனில் குழாய் உடைப்பால் கடலில் வீணாக குடிநீர் கலப்பதை தடுக்கவும், குழாய் உடைப்பை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே பாம்பனில் குடிநீர் கடலில் வீணாக கலந்து வருவதை தடுக்கவும், குழாய் உடைப்பை சரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story