திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியின்றி தேர்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை,
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. இதில் 543 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் இடைக்கால தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவராக பாரி பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தொடங்கப்பட்டு, 6 மாதங்களுக்குள் நிர்வாக குழுவை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, நிர்வாக குழுவில் 17 இயக்குனர்களை தேர்வு செய்வதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 27-ந் தேதி திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆவின் நிறுவன அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் பொது பிரிவில் 9 பேரும், பெண்கள் பிரிவில் 5 பேரும் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. இதில் தாக்கல் செய்யப்பட்ட 17 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, தேர்தல் அலுவலர்களால் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாளான 29-ந் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை யாரும் திரும்ப பெறாததால் இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்பட்டது. அதில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.முனுசாமி, என்.கஜேந்திரன், கே.வி.புஷ்பலிங்கம், எஸ்.தட்சிணாமூர்த்தி, சி.அருண், பி.ஜோதி, எச். தினகரன், பாரி பி.பாபு, ஆர்.சுப்பிரமணி, ஏ.முனுசாமி, ஆர்.முருகன், ஆர்.ஜெயந்தி, கே.கீதா, டி.இந்திரா, ஜி.ரேவதி, ஆர்.மஞ்சுளா ஆகியோர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆவின் நிறுவன அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 17 நிர்வாக குழு இயக்குனர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவராக பாரி பி.பாபு ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆவின் துணை பொது மேலாளருமான எம்.நாச்சியப்பனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
இதையடுத்து தலைவராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், துணைத்தலைவராக பாரி பி.பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைடுத்து அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் நாச்சியப்பன் வழங்கினார்.
அப்போது மாவட்ட துணை பதிவாளர் ராமச்சந்திரன், பொது மேலாளர் உலகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் ஆவின் அதிகாரிகள், அ.தி.மு.க.வினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story