காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: 22 பேருக்கு மருத்துவ பரிசோதனை
காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே பதிக்கப்பட்ட என்ஜினீயருடன் பழகிய 22 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இந்த பரிசோதனை 28-ந்தேதி வரை நீடிக்கும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம்,
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சென்னை கிங் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவில் இருந்து சிறப்பு மருத்துவ குழு நேற்று இரவு காஞ்சீபுரம் வந்தது. என்ஜினீயருடன் பழகிய 22 நபர்களின் வீடுகளுக்கும் மருத்துவ குழுவினர் நேரில் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.
22 நபர்களில் 8 பேர்களின் வீடுகளுக்கு சென்ற மருத்துவ குழு, 8 பேருக்கு மூக்கு வழியாக சிறப்பு பரிசோதனை நடத்தினார்கள்.
இந்த 22 நபர்களையும் வருகிற 28-ந்தேதி வரைக்கும் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்வார்கள்.
நோயின் அறிகுறிகள்
நேற்று காலை காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து அரசு பஸ்கள், தனியார் பஸ்களிலும் காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை சுகாதாரத்துறையினர் வழங்கினார்கள்.
காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஏற்படும். நோய் அறிகுறிகள் கண்ட நபர், இருமும்போதும், தும்மும்போதும் நேரடியாக பரவுகிறது.
தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு நன்கு கைகளை கழுவ வேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைகுட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.
சிறப்பு வார்டுகள்
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
24 மணிநேர உதவிக்கு 104,044-29510400, 044-29510500 என்ற எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சீபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story