கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பணி நிரந்தரம் செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை மாவட்ட மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் வகையில் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெற்று வருகிறார்கள்.
அதன்படி நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தர விட்டார்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வரும் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக தொழிலாளர்களை நியமித்து உள்ளனர். எனவே எங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை நாங்கள் வேலைக்கு செல்ல மாட்டோம் என்றுக்கூறிகோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 3 ஆயிரம் பேர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். எங்களுக்கு தினமும் ரூ.350 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு தொழிலாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.
இதில் பட்டப்படிப்பு படித்தவர்களை எல்லாம் நியமித்து உள்ளனர். ஆனால் 15 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் எங்களை தேர்வு செய்யவில்லை. எனவே காலியாக இருக்கும் துப்புரவு தொழிலாளர் பணியிடத்துக்கு எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்த வேண்டும். மேலும் எங்களை பணிநிரந்தரம் செய்யும் வரை நாங்கள் வேலைக்கு செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில் சூலூர் பகுதியில் உள்ள வதம்பச்சேரி, தெற்கால் தோட்டம் பகுதியில் பல ஏக்கரில் விவசாயிகள் தென்னை, வாழை உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மனஉளைச்சலில் உள்ளனர். எனவே விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரத்தை அமைக்காமல் தரிசு நிலங்களில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
திராவிடர் கழகம் சார்பில் கொடுத்த மனுவில், நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வரும் குழந்தைகளிடம் அங்கு பணியாற்றும் ஆசிரியை, சாதி பெயரை சொல்லி திட்டியும், குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய சொல்லியும் வற்புறுத்தி உள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் பேட் உள்பட விளையாட்டு பொருட்களுடன் வந்து கொடுத்த மனுவில், ஆர்.எஸ்.புரத்தில் சாஸ்திரி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, ஆக்கி உள்பட பல்வேறு விளையாட்டுகளை இளைஞர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த மைதானத்தில் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பில் 35-க்கும் மேற்பட்ட தற்காலிக குடிசைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு போடப்பட்டு இருக்கும் குடிசைகளை அகற்ற வேண்டும். அத்துடன் கிரிக்கெட் விளையாட மைதானமும் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
Related Tags :
Next Story