கொரோனா வைரஸ் காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு பரவியதன் எதிரொலி: பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு சுகாதாரத்துறை குழுவினர் நடவடிக்கை
கொரோனா வைரஸ் காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு பரவியதன் எதிரொலியாக, பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், சினிமா தியேட்டர், போலீஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை குழுவினர் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியது. இந்த நிலையில் ஓமன் நாட்டிலிருந்து இருந்து திரும்பிய காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், காஞ்சீபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோர் அறிவுரையின்படி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினர்.
கிருமி நாசினி தெளிப்பு
இதையடுத்து முதல் நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் பா.ரவி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் நந்திவரம் பஸ் நிலையம், சினிமா தியேட்டர், கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகள் ஆகியவற்றில் கிருமிநாசினி மருந்து எந்திரம் மூலம் தெளித்தனர்.
மேலும் நந்திவரம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து பஸ்களிலும், பஸ்சின் உள்பகுதியில் உள்ள இருக்கை, கைப்பிடி, மற்றும் வெளிப்பகுதிகளில் கிருமி நாசினி மருந்து எந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு
அதோடு மட்டுமில்லாமல், டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பள்ளி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சென்று கொரோனா வைரசில் இருந்து தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வுகளை செய்து காட்டினார்கள். மேலும் எப்படி கைகழுவ வேண்டும் என்பதையும் மாணவர்கள், பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள், டாக்டர்களுக்கும் விளக்கமாக செய்து காட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி, நந்திவரம் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் சதீஷ், பேரூராட்சி மேற்பார்வையாளர் ரமேஷ், பாலா மற்றும் சுகாதார பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story