அவனியாபுரம் அருகே, தலையை துண்டித்து கொல்லப்பட்ட வாலிபரின் அடையாளம் தெரிந்தது - 2 பேர் கைது


அவனியாபுரம் அருகே, தலையை துண்டித்து கொல்லப்பட்ட வாலிபரின் அடையாளம் தெரிந்தது - 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2020 3:30 AM IST (Updated: 10 March 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

அவனியாபுரம் அருகே தலையை துண்டித்து கொல்லப்பட்ட வாலிபரின் அடையாளம் தெரிந்தது.

மதுரை,

மதுரை அவனியாபுரத்தில் இருந்து வைக்கம் பெரியார் நகர் செல்லும் சாலையில் புதர் மண்டிய நிலையில் கண்மாய் ஒன்று உள்ளது. அந்த கண்மாய் கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலையில்லாமல் ஒரு உடல் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 35) என்பது தெரிய வந்தது.

மேலும் முத்துப்பாண்டி, அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ரஞ்சித், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து திருநாவுக்கரசை கொலை செய்தது தெரிய வந்தது.

மேலும் முத்துப்பாண்டி கொடுத்த தகவலின் பேரில் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசுவின் தலையை போலீசார் மீட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த சிவக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

சிவக்குமாருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பைப் குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் திருநாவுக்கரசு வேலை தேடி அந்தப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது பைப்குமார் அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

பைப் குமார் தன்னை கொலை செய்யத்தான் திருநாவுக்கரசுவை அழைத்து வந்துள்ளார் என நினைத்த சிவக்குமார், தனது நண்பர்களான முத்துப்பாண்டி, ரஞ்சித், செந்தில்குமார் ஆகியோருடன் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திருநாவுக்கரசுவை தலை துண்டித்து கொலை செய்து உள்ளனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் சிவக்குமாரையும், முத்துப்பாண்டியையும் கைது செய்து தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தானா, அவருக்கு உறவினர்கள் யாரும் உள்ளார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Next Story