கிராம உதவியாளர் பணி வழங்காததால் விரக்தி: குடும்பத்துடன் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த காவலாளி


கிராம உதவியாளர் பணி வழங்காததால் விரக்தி: குடும்பத்துடன் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த காவலாளி
x
தினத்தந்தி 10 March 2020 3:15 AM IST (Updated: 10 March 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

கிராம உதவியாளர் பணி வழங்கப்படாததால் காவலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர், 

குடியாத்தம் தாலுகா ராமாலை தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவருடைய மனைவி முகலீஸ்வரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சதீஷ்குமார் தனது மனைவி, மகள்களுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.

அதில், ஒரு லிட்டர் கேனில் மண்எண்ணெய் இருந்தது. உடனடியாக போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட எனக்கு கிராம உதவியாளர் பணி வழங்காமல் ஏமாற்றி வருவதால் விரக்தி அடைந்து குடும்பத்துடன் தீக்குளிக்க மண்எண்ணெய் கொண்டு வந்தேன் என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் சதீஷ்குமாருக்கு அறிவுரை கூறி குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேைலவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு எனக்கு கிராம உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது. அதில், நான் கலந்து கொண்டு, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.

அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர் செல்போனில் பேசிய ஒருவர் நேர்முகத் தேர்வில் நான் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், ரூ.4 லட்சம் பணம் கொடுத்தால் உடனடியாக கிராம உதவியாளர் வேலைக்கான ஆணை தருவதாகவும் கூறினார். எனக்கு வசதி இல்லாததால் பணம் கொடுக்கவில்லை. அதனால் எனது வேலையை வேறுநபருக்கு கொடுத்து விட்டனர்.

இதுகுறித்து குடியாத்தம் தாலுகா அலுவலகம், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன்.

குறைந்த வருமானத்தால் குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு கிடைக்க வேண்டிய கிராம உதவியாளர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story