நெல்லை மேலப்பாளையம் சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வு கிலோ ரூ.450–க்கு விற்பனை
நெல்லை மேலப்பாளையம் சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.450–க்கு விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.450–க்கு விற்பனை செய்யப்பட்டது.
பறவை காய்ச்சல்
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவுக்கும் பரவி உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது.
இதையொட்டி பிராய்லர் எனப்படும் இறைச்சி கோழிகள் மூலம் பறவை காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அசைவ பிரியர்கள் கோழி இறைச்சி சாப்பிடுவதையும், முட்டை சாப்பிடுவதையும் தவிர்த்து வருகின்றனர்.
விற்பனை சரிவு
இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கறிக்கோழி, முட்டை விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. எனவே, 1 கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி நேற்று ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
முட்டை விலையும் கடுமையாக சரிந்துள்ளது. ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு முட்டை நேற்று ரூ.3.50 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்த வியாபார கடையில் முட்டை விலை 2.50 ஆக இருந்தது.
நாட்டுக்கோழி
இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் வாரச்சந்தை நேற்று கூடியது. அப்போது அங்கு நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இறைச்சி சாப்பிடுவோர் பிராய்லர் கோழிகளுக்கு பதிலாக நாட்டுக்கோழிகளை ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கினர்.
இதனால் ஆரம்பத்தில் சராசரி விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டுக்கோழி விலை கடுமையாக உயர்ந்தது. 1 கிலோ ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்ட நாட்டுக்கோழி நேற்று ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நாட்டுக்கோழி முட்டைகளும் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story