12 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை - கலெக்டர் பேட்டி


12 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை - கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2020 3:30 AM IST (Updated: 11 March 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. 12 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர்,

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் நிகழ்ச்சி வேலூர் பஸ்நிலையத்தில் நேற்று நடந்தது. பயிற்சி கலெக்டர் பூர்ணிமா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ் (பொறுப்பு), மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பஸ்களில் பொதுமக்கள் கைவைக்கும் இடங்கள் மற்றும் டயர்களில் சுகாதாரப்பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். இதனை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து பஸ்களிலும் பயணிகள் கைவைக்கும் இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலை கடைகள், மக்கள் கூடும் இடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் கொேரானா வைரஸ் தொடர்பாக 2 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்து படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தற்போது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், அவர்களை பார்க்க பெற்றோர், உறவினர்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு நோயாளிகளும், ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா பயணிகளும் தினமும் வருகை தருகின்றனர். மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள திருப்பதிக்கு செல்வதற்காக வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருவதால் வேலூர் அடுக்கம்பாறையில் கொேரானா வைரஸ் ஆய்வகம் அமைக்க அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 13 சோதனை சாவடிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தி உள்ளோம். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. சீனா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 12 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொேரானா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

இதில், 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன், மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story