துரைப்பாக்கம் கண்ணகி நகரில் குடியிருப்பு கட்டிட சுவர்களில் வர்ணம் பூசும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
துரைப்பாக்கம் கண்ணகி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களின் சுவர்களில் வர்ணம் பூசும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ‘ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன்’ நிறுவனத்தின் சார்பில் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களின் சுவர்களில் வண்ண ஓவியங்களுடன் கூடிய வர்ணம் பூசும் கண்ணகி கலை மாவட்ட திட்டத்துக்கான நிகழ்ச்சியை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ், போலீஸ் கமிஷனர் ஜி.விஸ்வநாதன், மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஷ், ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன் திட்ட இயக்குனர் தனிஷ் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் சுனாமி நகர் பகுதிகளில் உள்ள 15 சுவர்களில் ரூ.40 லட்சம் செலவில் ஓவியங்கள் வரையும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கலையை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்’.
அதனைத்தொடர்ந்து ஓவியம் வரைந்த ஓவியக்கலைஞர்கள், தன்னார்வலர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த திருநங்கைகள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும் வழங்கப்பட்டன.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story