சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் இயக்குனரிடம் என்.ஆர்.தனபாலன் மனு
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட விமான நிலைய ஆணையக இயக்குனரிடம் என்.ஆர்.தனபாலன் மனு அளித்தார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குனர் சுனில் தத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்திற்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்கள் சூட்டப்பட வேண்டும். விமானங்களில் காமராஜர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று அறிவிக்கப்பட வேண்டும்
முனையங்களில் 2 தலைவர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டும். தலைவர்களின் முழு உருவச்சிலைகளையும் முனையங்கள் முன்பு வைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி டெல்லியில் உள்ள ஆணையகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார். என்.ஆர்.தனபாலனுடன் சென்னை புறநகர் நாடார் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நிர்வாகிகள் வைகுண்டராஜா, விஜயன், விக்டர் உள்பட பலர் சென்றனர்.
பின்னர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனம்பாக்கம் விமான நிலைய இயக்குனரை தொடர்ந்து 3-வது முறையாக சந்தித்து விமானங்களில் காமராஜர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கையை டெல்லிக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படும். இதற்கான உத்தரவை டெல்லியில் உள்ள அமைச்சகம் தான் செய்ய வேண்டும் என்றார். டெல்லியில் துறை மந்திரியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவோம். அதன் பின்னரும் அண்ணா, காமராஜர் பெயரில் அறிவிப்பு வரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story