உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 11 March 2020 4:00 AM IST (Updated: 11 March 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

நெடுங்குன்றம் கிராமத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

செங்கல்பட்டு,

நெடுங்குன்றம் கிராமத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

வண்டலூர் வட்டம் நெடுங்குன்றம் கிராமம் அசோக் நகர் என்ற மனைப்பிரிவு 1882-ம் ஆண்டு 450 மனை பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டது. பின்னர் பல நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மனைப்பிரிவில் உட்பிரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பல நபர்களிடம் கைமாறி இன்றைய சந்தை விலையாக 2400 சதுர அடி மனையின் விலையானது ரூ.60 லட்சம் வரை விற்பனையாகிறது.

மேலும் மனைப்பிரிவில் அமைந்துள்ள வீட்டு மனைகள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி கொண்டு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம். வங்கியின் மூலமாக கடன் பெற்று 20 ஆண்டுகளாக மாதத்தவணை செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எங்களுடைய மனையான 82 மற்றும் 83 மனைகளில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

மனைப்பிரிவில் 90 மனையின் மீது நேரடியாக உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லுகிறது. இதனை சுற்றியுள்ள மனைப்பிரிவில் 250 மனைகளும் பாதிக்கப்படுகிறது.

எனவே எங்களுக்கு சொந்தமான அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளை நிரந்தரமாக கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story