வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது மனைவியை தரக்குறைவாக பேசியதால் கொலை செய்தது தெரியவந்தது
மதுரவாயல் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
மதுரவாயல், ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). இவர் நேற்று முன்தினம் மதுரவாயல், பலராமன் தெருவில் உள்ள காலிமைதானத்தில் தலையில் கல்லை போட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதையடுத்து மதுரவாயல் போலீசார் இறந்து கிடந்த முனுசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகள் யார்? என்பது குறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக, அதே பகுதியில் உள்ள அறையில் தங்கியிருந்த பிரசாந்த் (வயது 28), சதீஷ்(27), குமார்(48) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தபோது, முனுசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.போலீசார் விசாரணையில் தெரியவந்ததாவது:-
கொலை செய்யப்பட்ட கமுதி, சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி 4 மாதங்களாக மதுரவாயலில் தங்கி இறைச்சி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
முனுசாமிக்கு திருமணமாகி மனைவி வைத்தீஸ்வரியுடன் ஏற்பட்ட தகராறில் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும், கடந்த வருடம் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்த பிரசாந்த் என்பவருடன் முனுசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசாந்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.இதனால் பிரசாந்த் வீட்டை காலி செய்துவிட்டு முனுசாமி தங்கி இருக்கும் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் தங்கி வந்துள்ளார்.சம்பவத்தன்று முனுசாமி, பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களான சதீஷ் மற்றும் குமார் ஆகிய 4 பேரும் காலை முதல் மதுஅருந்தியுள்ளனர். அப்போது பிரிந்துசென்ற பிரசாந்தின் மனைவியை முனுசாமி தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் அங்கிருந்த கட்டையை எடுத்து முனுசாமியை அடித்துள்ளார். அதில், முனுசாமி மீண்டும் தாக்க முயன்றபோது, பிரசாந்த் உள்பட அறையில் இருந்த அவரது நண்பர்கள் உள்பட 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story