திருவள்ளூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை , பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம், ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு என மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.அவர்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 296 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் கலெக்டர், மப்பேடு கூட்டு சாலையில் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி ஆபத்தில் இருந்து பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், பலத்த காயம் அடைந்த பிரிஸ்டன் பிராங்கிளின் என்பவருக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
மேலும், சிறு காயம் அடைந்த ஈஸ்டர் பிரேம் குமார், வினித் மற்றும் சார்லிபன் ஆகிய 3 குடும்பத்திற்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்திற்கான காசோலைகளையும், ஆவடி வட்டம் திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து, பின்னர் சவுதி அரேபிய நாட்டில் உயிரிழந்த ராஜு சந்திரசேகரன் என்பவரின் வாரிசுதாரரான சோனியா ராஜு என்பவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 119-க்கான காசோலைகள் என மொத்தம் ரூ.17 லட்சத்து 119 அதற்கான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பார்வதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story