ஊத்துக்குளியில் பள்ளிக்கு இடத்தை ஒப்படைக்கும் விவகாரம்: போராட்டக்குழுவினருடன் தாசில்தார் பேச்சுவார்த்தை


ஊத்துக்குளியில் பள்ளிக்கு இடத்தை ஒப்படைக்கும் விவகாரம்: போராட்டக்குழுவினருடன் தாசில்தார் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 11 March 2020 4:30 AM IST (Updated: 11 March 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளியில் பள்ளிக்கு இடத்தை ஒப்படைக்கும் விவகாரம் தொடர்பாக போராட்டக்குழுவினருடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஊத்துக்குளி, 

ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி உள்ள இடத்தை மீட்டு, பள்ளி வசம் ஒப்படைக்க கோரி அனைத்து கட்சி போராட்டக்குழு சார்பில் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளை தாசில்தார் கார்த்திகேயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் தலைமை தாங்கினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேஷ், இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சுவார்த்தையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, பேரூர் செயலாளர் கே.கே.ராசுக்குட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஆர்.எஸ்.கிளை செயலாளர் வி.கே.பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்.எஸ்.கிளை செயலாளர் வி.ஏ.சரவணன், தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.கே.குமரன், காங்கிரஸ் வட்டார தலைவர் எம்.சி.பழனிசாமி, நகர தலைவர் ரங்கசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கோபால்ராஜா, கே.எம்.குப்புசாமி, எம்.கிருஷ்ணன் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட இடம், ராக்கியாபாளையம் கிராமம் வண்டி பேட்டை, பள்ளி, சத்திரம் என வகைப்பாடு செய்யப்பட்டு உள்ளதால், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளிக்கு ஒப்படைக்க வேண்டும். இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதால் இந்த பணியை விரைவாக செய்ய வேண்டும். பள்ளி இடத்தை வகைமாற்றி, பட்டா கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களில் நிலமற்ற தகுதியானவர்கள் இருந்தால் மாற்று இடமும் பட்டாவும், வழங்கி அவர்களுக்கு குடியிருப்பு மாறுதல் செய்ய வேண்டும் என போராட்டக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து போராட்ட குழு கோரிக்கையை கலெக்டருக்கு தெரிவிக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.

Next Story