மராட்டியத்தில் நுழைந்த உயிர்கொல்லி வைரஸ் மும்பை கார் டிரைவர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு புனே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


மராட்டியத்தில் நுழைந்த உயிர்கொல்லி வைரஸ்   மும்பை கார் டிரைவர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு   புனே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 11 March 2020 5:15 AM IST (Updated: 11 March 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மும்பை கார் டிரைவர் மற்றும் புனேயை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

புனே, 

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்த நாட்டை மட்டுமின்றி உலகையே பெரும் அல்லலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மராட்டியத்தில் நுழைந்தது

இதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் டெல்லி, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஊடுருவி விட்டது. இந்தநிலையில் மராட்டிய மாநிலத்திலும் உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ் நுழைந்து அதிர்ச்சி அளித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு

துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த மராட்டியத்தை சேர்ந்த 40 பேர் கடந்த 1-ந் தேதி மும்பை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். மும்பை விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்திய தெர்மல் மருத்துவ பரிசோதனையில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என தெரியவந்தது.

இந்தநிலையில் புனேயை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகிய 3 பேர் ஓலா வாடகை கார் பிடித்து வீட்டுக்கு சென்றனர். கொரோனா அறிகுறியுடன் சமீபத்தில் அவர்கள் புனேயில் உள்ள நாயுடு மாநகராட்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனையில் கணவன், மனைவி 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் மாலை உறுதியானது. இதையடுத்து அவர்கள் அந்த ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு உள்ள தனிமை வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். நேற்று அந்த தம்பதியினர் மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் 2 பேருக்கு...

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மும்பை விமான நிலையத்தில் இருந்து புனேக்கு சவாரி ஏற்றி சென்ற ஓலா கார் டிரைவர் கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர் மும்பையை சேர்ந்த டிரைவர் ஆவார்.

துபாயில் இருந்து அதே விமானத்தில் வந்த புனேயை சேர்ந்த மேலும் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் மராட்டியத்தை சேர்ந்த 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 5 பேருக்கும் புனே நாயர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் நுழைந்து இருப்பது மாநில மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

Next Story