ஆள்மாறாட்டம் செய்து ேவறு ஒருவர் ஆஜர்: இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு, கல்லூரி மாணவர் சிக்கினர் - சாத்தூர் கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு


ஆள்மாறாட்டம் செய்து ேவறு ஒருவர் ஆஜர்: இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு, கல்லூரி மாணவர் சிக்கினர் - சாத்தூர் கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 11 March 2020 3:45 AM IST (Updated: 11 March 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரை ஆஜர்படுத்தியது தொடர்பாக இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு மற்றும் கல்லூரி மாணவர் சிக்கினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததாக கீழான்மறைநாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மாரிச்சாமியை பிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு சாத்தூரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதில் மாரிச்சாமி என்று கூறி ஒருவர் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கில் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் அவரிடமிருந்து அபராதத்தொகை பெறப்பட்டு ரசீதில் கையெழுத்திடப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த ரசீதில் இருந்த கையெழுத்தும், அபராத தொகைக்கான ரசீதில் இருந்த கையெழுத்தும் வெவ்வேறு என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோர்ட்டில் ஆஜரான நபரை விசாரித்தபோது அவர் ராணுவ வீரர் மாரிச்சாமியின் உறவினரான வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது20) என்பது தெரியவந்தது. இவர் சாத்தூர் அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

மேலும் விசாரணையில், இவர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் பெண் ஏட்டு கணபதி ஆகியோருடன் சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்ததாகவும் தெரியவந்தது. அபராதத்தை செலுத்தி வழக்கை முடிப்பதற்காக ஆஜரானதும் தெரியவந்தது.

இதுகுறித்து, நீதிபதி சண்முகவேல்ராஜா உத்தரவின்பேரில், ேகார்ட்டு ஊழியர் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில், ஆள்மாறாட்டம் செய்த மாணவர் சரவணன், அவருக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, பெண் ஏட்டு கணபதி ஆகியோர் மீது நேற்று சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story