வாராப்பூர் ஊராட்சி சார்பில் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கலந்துரையாடல்
வாராப்பூர் ஊராட்சி சார்பில் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி சார்பில், வாராப்பூர் சமுதாய கூடத்தில் மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம், நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை சார்பில் கிராம அளவிலான நிலத்தடிநீர் மேலாண்மை திட்டம் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசூர்யா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தைச் சேர்ந்த நீர் புவியியல் அறிஞர்கள் வெங்கடஜலபதி, சக்திவேல் ஆகியோர் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கான காரணங்களையும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான ஆலோசனைகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் நிலத்தடி நீர் குறைவதற்கு முக்கிய காரணங்கள் விவசாய நிலங்களில் தேவைக்கு அதிகமாக தண்ணீரை பயன்படுத்துவது, தண்ணீரை அதிகமாக எடுக்கும் பயிரை பயிரிடுவது, ஏரி, குளம், ஊருணி போன்ற பகுதியில் உள்ள மழை நீரை முறையாக சேமித்து அந்த தண்ணீரை பயன்படுத்தாமல் விடுவது போன்ற பல காரணங்களினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது.
இதனை தடுக்க பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை முறையாக தேக்கி வைப்பது, விவசாய வல்லுனர்கள் அறிவுரைப்படி மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு பயிரினங்களை சுழற்சி முறையில் பயிர் இடுவது, அதிகப்படியான மரக்கன்றுகளை நட்டு அதனை முறையாக பராமரித்து வருவது, மேலும் வீட்டின் மேற்கூரையில் விழும் மழைநீரை ஆழ்குழாய் கிணறுகளின் மூலமாகவும், நீர் தொட்டி மூலமாகவும், சேமித்து வைத்து அதை பயன்படுத்துவது போன்ற செயல்பாட்டின் மூலமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவதை நாம் தடுக்கலாம் என்று கிராம மக்களிடையே ஆலோசனை கூறப்பட்டது.
இந்திய அரசாங்கத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான திட்டங்கள் எப்படி செயல்படுகி்றது என்பதையும் விளக்கி பொதுமக்களிடம் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் வாராப்பூர் ஊராட்சி மன்றம் சார்பில், கிராமத்திற்கு 2 பேர் வீதம் மொத்தம் 12 பேர் கொண்ட குழுவை உருவாக்கி தங்கள் கிராம பகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு வழிவகை செய்ய குழு உருவாக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையைச் சேர்ந்த மத்திய நிலத்தடிநீர் வாரியம், தென்கிழக்கு கடலோர மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story