மனித வாழ்வில் அழியாத சொத்து கல்வி மட்டுமே - பட்டமளிப்பு விழாவில் போலீஸ் ஐ.ஜி. பேச்சு
மனித வாழ்வில் அழியாத சொத்து கல்வி மட்டுமே என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் போலீஸ் ஐ.ஜி. பேசினார்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. முருகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் 20-வது இடம் பிடித்த முதுநிலை கட்டிடவியல் மாணவர் மணிரத்னத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் ஐ.ஐி. முருகன் பேசியதாவது:- மனித வாழ்வில் அழியாத சொத்து கல்வி மட்டுமே. நமது பெயருக்கு முன்னால் எப்படி பெற்றோர் பெயர் வருகிறதோ, அதே போல் பெயருக்கு பின்னால் நமது பட்டமும் வாழ்வின் இறுதி வரை தொடரும். அத்தகைய சிறப்பு பெற்ற இந்த பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற வைத்த மாதா, பிதா, குரு ஆகிய 3 பேரையும் நமது வாழ்வில் மறக்க கூடாது.
மேலும் பட்டம் வாங்கியுள்ள மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக்கொள்ளவேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி உள்ள நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் மயில்வாகனன் வரவேற்றார். விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா, மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள், ராஜராஜன் கல்விக்குழுமங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தில் கர்னல் பதவி வகிக்கும் ஹென்றி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story