2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை கணவர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
ராமநாதபுரம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள எஸ்.கே.ஊருணியை சேர்ந்தவர் ராஜாக்கிளி. இவரது மகள் ரேகா(வயது 23). இவருக்கும், கீழநாகாச்சி பகுதியை சேர்ந்த சந்திரதேவர்(57) மகன் டிரைவர் பழனி(34) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வைஷ்ணவி(3), வைசாலி(2) என்ற பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு உச்சிப்புளி பகுதியில் தனது 2 பெண் குழந்தைகளுடன் ரேகா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் ரேகா மற்றும் 2 குழந்தைகள் இறப்பிற்கு காரணமான கணவர் பழனி, அவரது தந்தை சந்திரதேவர், தாயார் ஆறுமுகம் அம்மாள்(52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த பழனி, சந்திரதேவர், ஆறுமுகம் அம்மாள் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோரஞ்சிதம் ஆஜரானார்.
Related Tags :
Next Story