வத்தலக்குண்டு அருகே குடிசைகள், 8 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம் மர்மநபர்கள் தீ வைத்ததாக புகார்


வத்தலக்குண்டு அருகே குடிசைகள், 8 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம் மர்மநபர்கள் தீ வைத்ததாக புகார்
x
தினத்தந்தி 11 March 2020 5:24 AM IST (Updated: 11 March 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே குடிசைகள், 8 வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் தீ வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே உள்ள ரெட்டியபட்டி தெற்குதெருவில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தோடு ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதற்காக அவர்கள், மண்டு மதுரைவீரன் கோவில் வளாகத்தில் 2 குடிசைகள் அமைத்துள்ளனர். மேலும் மாடுகளுக்கு தேவையான வைக்கோலை அங்கு 8 படப்புகளாக அடைந்து வைத்திருந்தனர்.

அங்கு சத்யா, கலைவாணி ஆகிய 2 பெண்கள் ஆடு, மாடுகளை பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வைக்கோல் படப்பு ஒன்றில் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அடுத்தடுத்த வைக்கோல் படப்புகளுக்கும், குடிசைகளுக்கும் தீ பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட பொதுமக்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 குடிசைகளும், 8 வைக்கோல் படப்புகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கு தங்கியிருந்த சத்யா, கலைவாணி ஆகியோர் உறவினர் வீட்டுக்கு சென்றதால் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் ஆடு, மாடுகள் தீயின் உக்கிரம் தாங்காமல் கயிறுகளை அறுத்துக் கொண்டு ஓடியதால் உயிர் தப்பின.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சார்பாக ரெட்டியபட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுரே‌‌ஷ் என்பவர் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மர்மநபர்கள் சிலர் வைக்கோல் படப்புகளுக்கும், குடிசைகளுக்கும் தீ வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆதார் அட்டை, ரே‌‌ஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு ஊரை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்பேரில் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story