கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 March 2020 3:45 AM IST (Updated: 11 March 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கடலூர், 

அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் கடலூரில் உள்ள மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. கடலூர் மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கருணாநிதி, சி.ஐ.டி.யு. சம்மேளன துணை தலைவர் பாஸ்கரன், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க மாநில செயலாளர் மணிமாறன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தீர்வுகாண வேண்டும், தொழிலாளர்களின் பணத்தில் நிர்வாகம் நடத்த கூடாது, ஆயிரம் நாட்களுக்கு மேல் பணி செய்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் தொ.மு.ச. துணை பொதுச்செயலாளர் ஜெயராவ், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க துணை தலைவர் பாலகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் ஜான்விக்டர் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Next Story