தூவானம் ஏரியில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? - சுற்றுலாபயணிகள் எதிர்பார்ப்பு
தூவானம் ஏரியில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. சுருளி அருவிக்கு மழை காலத்தில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரும், தூவானம் ஏரியில் இருந்து வரும் உபரிநீரும் அடர்ந்த வனப்பகுதி வழியாக வருகிறது.
அருவியில் குளிப்பதற்கு தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் நீராடி விட்டு இறந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
கடந்த காலங்களில் கோடைகாலத்திலும் மழை இருந்ததால், அருவியில் நீர் வரத்து இருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலும் நின்று பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சுருளி அருவிக்கு மழை பெய்தால் மட்டும் நீர் வரத்து இருக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதே நிலை நீடித்தால் சுற்றுலா தலம் என்ற பெருமை மாறிவிடும். எனவே சுற்றுலா பகுதியை காக்கும் வகையில் சுருளி அருவிக்கு தூவானம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Related Tags :
Next Story