திருச்செந்தூர்–உடன்குடி இடையே இயக்கப்படும் சிவப்பு நிற அரசு டவுன் பஸ்சில் கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும்


திருச்செந்தூர்–உடன்குடி இடையே இயக்கப்படும்  சிவப்பு நிற அரசு டவுன் பஸ்சில் கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 March 2020 3:00 AM IST (Updated: 11 March 2020 9:03 PM IST)
t-max-icont-min-icon

சிவப்பு நிற அரசு டவுன் பஸ்சில் கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குலசேகரன்பட்டினம், 

திருச்செந்தூர்–உடன்குடி இடையே இயக்கப்படும் சிவப்பு நிற அரசு டவுன் பஸ்சில் கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடுதல் கட்டணம் 

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக உடன்குடிக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண் 2) இயக்கப்படுகிறது. முன்பு இந்த பஸ்சில் திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு ரூ.13–ம், உடன்குடிக்கு ரூ.15–ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த டவுன் பஸ்சுக்கு பதிலாக, அதே வழித்தட எண்ணுடன் திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக உடன்குடிக்கு சிவப்பு நிற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த சிவப்பு நிற டவுன் பஸ்சில் திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு ரூ.25–ம், உடன்குடிக்கு ரூ.30–ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் அந்த பஸ்சில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது.

குறைக்க கோரிக்கை 

சிவப்பு நிற பஸ்சில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை அறியாத பாமர மக்கள், அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்யும்போது, கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல், இடையிலேயே இறங்கி செல்லும் நிலை உள்ளது.

குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள், பக்தர்களின் நலன் கருதி, சிவப்பு நிற பஸ்சில் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும். அல்லது குறைந்த கட்டணத்தில் முன்பு இயக்கப்பட்ட டவுன் பஸ்சையே மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story