கொரோனா வைரஸ் எதிரொலி: ஊட்டியில் அரசு பஸ்கள், சுற்றுலா தலங்களில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊட்டியில் அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கிருமிநாசினி தெளிக்கப் பட்டது.
ஊட்டி,
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது உலகம் முழுவதும் 100 நாடுகளில் பரவியுள்ளது. உலகில் இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரள மாநிலத்தில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு வருகிற 31-ந் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்பதால், சுற்றுலா தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து இருந்தாலும், கொரோனா வைரஸ் எதிரொலியாக சிலர் முகக்கவசம் அணிந்தபடி வருகை தருகின்றனர். ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமிநாசினி மூலம் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டிக்கெட் பெறும் இடம் மற்றும் உள்பகுதிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. நுழைவுவாயில் பகுதியில் முகக்கவசம் அணிந்த பணியாளர்கள் சுற்றுலா பயணிகள் வாங்கிய டிக்கெட்டுகளை பரிசோதித்து உள்ளே அனுப்புகின்றனர். டிக்கெட் பெறும் இடத்தில் பணிபுரிபவர்கள் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்து பணிபுரிகின்றனர். இதேபோல் ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 450 அரசு பஸ்கள் கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளியிடங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் நலனை பாதுகாத்திடும் பொருட்டு அரசு பஸ்கள் அந்தந்த பணிமனைகளில் நேற்று காலை முதலே கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் அமரும் இருக்கைகளிலும் மருந்து தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story