தாயார் வீட்டிற்கு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி


தாயார் வீட்டிற்கு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 12 March 2020 3:00 AM IST (Updated: 11 March 2020 11:57 PM IST)
t-max-icont-min-icon

தாயார் வீட்டிற்கு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பனியன் நிறுவன தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியை சேர்ந்தவர் ஹரிலட்சுமணன். இவரது மகன் பிரேம்குமார் (வயது 28). இவர் வேலம்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இதே நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை செங்கோடம்பாளையம் சின்னகவுண்டர் தெருவை சேர்ந்த அர்ஜூனன் என்பவரது மகள் சுஜாதா (22) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் இருவரும் பேசி பழகினர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கலப்பு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி கோவையில் உள்ள கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்க அலுவலகத்தில் சீர்திருத்த முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.

அதன் பின்னர் கலப்பு திருமணம் செய்த தம்பதி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுஜாதாவை அவருடைய பெற்றோர் சமாதானமாக பேசி வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது. அவரும் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பிரேம்குமாரால், சுஜாதாவை செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேம்குமாரை தாக்கி, சுஜாதாவிற்கும் பிரேம்குமாருக்கும் எந்த தொடர்பும் கிடையாது என போலீஸ் நிலையத்தில் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரேம்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். அப்போது தனது காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பனியன் நிறுவன தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story