திருச்சி அருகே நள்ளிரவில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகரின் வாகனம் தீ வைத்து எரிப்பு


திருச்சி அருகே நள்ளிரவில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகரின் வாகனம் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 12 March 2020 6:00 AM IST (Updated: 12 March 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே சோமரசம்பேட்டையில் இந்து முன்னணி பிரமுகரின் வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள், அவருடைய வீட்டிற்குள் கற்களை வீசி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவருடைய மனைவி லோகேஸ்வரி (30). இவர்களுக்கு சாய்ஸ்ரீ (7), லியாஸ்ரீ (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகில் உள்ள அதவத்தூர் சிவாநகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் சக்திவேல் வசித்து வருகிறார்.

மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளராக பதவி வகித்து வரும் இவர், நில வணிகம் செய்து வந்தார். தற்போது, கட்டுமான பணிகளையும், உள்அலங்கார வேலைப்பாடுகளையும் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். நேற்று முன்தினம் சக்திவேலின் மனைவி தனது குழந்தைகளுடன் காவல்காரன்பட்டிக்கு சென்றிருந்தார்.

ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வேலை முடிந்து, சக்திவேல் தனது வீட்டிற்கு சென்றார். பின்னர், தனது ஸ்கூட்டரை வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று தூங்கிவிட்டார். அவருடன், அவருடைய சித்தப்பா மகன் முகே‌‌ஷ் (21) தங்கியிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் அங்குவந்த மர்ம நபர்கள், ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, வீட்டிற்குள் கற்களை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த இருவரும், ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. மேலும் மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் வீட்டின் முன்பக்க பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

போலீசார் விசாரணை

இதுபற்றி சோமரசம்பேட்டை போலீசாருக்கு சக்திவேல் தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நேற்று காலை மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

அது, மர்மநபர்கள் வீசிச்சென்ற கற்களை மோப்பம் பிடித்து, சக்திவேல் வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று அதவத்தூர் பிரிவு சாலையில் படுத்துக்கொண்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு, அங்கு மர்மநபர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பலத்த பாதுகாப்பு

இந்த சம்பவம் குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசியல் காரணங்களுக்காக சக்திவேலின் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்டதா? அல்லது தொழில் போட்டியில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் அந்தபகுதியில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ராம்நகர் பகுதியில் இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், திருச்சி அருகே இந்து முன்னணி பிரமுகரின் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story