கண்ணன்கோட்டை நீர்தேக்க இறுதிகட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
கண்ணன்கோட்டை நீர்த்தேக்க இறுதி கட்ட பணிகளை பொதுப்பணித்துறை உயர் அதிகாரி நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் இந்த ஏரிகள் வற்றி விடுவதால் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்று இணைத்து 1,485 ஏக்கர் நிலபரப்பில் பிரமாண்ட அணை கட்டப்படும் என்று அறிவித்து ரூ.330 கோடியை அப்போது ஒதுக்கினார். அதன்படி நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்த மாத இறுதியில் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேற்று ஊத்துக்கோட்டை வந்தார்.
பணிகளை ஆய்வு
ஊத்துக்கோட்டை பேரூராட்சி எல்லையில் உள்ள அம்பேத்கர் நகரிலிருந்து கண்ணன்கோட்டை நீர்தேக்கம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி அவர் கூறும்போது:-
கடந்த 8 ஆண்டுகாலமாக இழுபறியாக நீடித்து வந்த பகுதியில் தற்போது இறுதி கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு பருவ மழைநீர் சேமித்து வைக்கப்பட்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்படும் என்று கூறினார்.
ஆய்வின் போது, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன், உதவி பொறியாளர்கள் பாபு, தனசேகர், சுந்திரம், பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story