ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 700 சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 700 சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
x
தினத்தந்தி 12 March 2020 4:00 AM IST (Updated: 12 March 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 700 சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரசை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

வேலூர்,

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரசுக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்ற முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்ச்சியை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் பஸ்களில் பயணிகள் கைவைக்கும் இடங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களின் டயர்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

மேலும் வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 13 சோதனை சாவடிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகள் அமரும் இடங்கள், பஸ்களில் பயணிகள் கைவைக்கும்இடங்கள், டயர்களில் சுகாதார அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க 700 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ்நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினியை தெளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணைஇயக்குனர் டாக்டர் சுரேஷ் கூறுகையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒரு ஊராட்சிக்கு 20 சுகாதார பணியாளர்கள் வீதம் 20 ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அதைத்தவிர வேலூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட 300 சுகாதார பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனியார் பஸ்கள், வணிகவளாகங்கள், தியேட்டர்களில் அவர்களே கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Next Story