தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 30 பேர் காயம்


தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 30 பேர் காயம்
x
தினத்தந்தி 12 March 2020 5:00 AM IST (Updated: 12 March 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

தம்மம்பட்டி,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்த உலிபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்கு உலிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இதையொட்டி உலிபுரம் கிராமத்தில் தனியார் நிலத்தில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கு வசதியாக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. இதற்காக சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 644 காளைகளை அழைத்து வந்தனர். போட்டியில் பங்கேற்பதற்காக காளையின் உரிமையாளர்கள் புகைப்படம், மருத்துவ சான்றிதழ்களை விழா நடைபெறும் இடத்தில் பதிவு செய்தனர். அப்போது அங்கிருந்த கால்நடை பராமரிப்புத்துறையினர் காளைகளுக்கு ஏதேனும் நோய் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்தனர்.

மாடுபிடி வீரர்கள்

ஜல்லிக்கட்டில் 115 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் தம்மம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சதீ‌‌ஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டன. பார்வையாளர் கூட்டத்திற்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க பாதுகாப்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டு காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து, கெங்கவல்லி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க பாய்ந்தனர். காளையை பிடிக்க முயன்றபோது வீரர்களின் பிடியில் சிக்காமல் சில காளைகள் துள்ளிக்குதித்து ஓடின. மாடுபிடி வீரர்கள் சில காளைகளின் திமிலை பிடித்து கொண்டு மல்லு கட்டியபடி சிறிது தூரம் சென்றனர். வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் விழாக்குழுவினர் சைக்கிள், குக்கர், சில்வர் பாத்திரங்கள் உள்பட பல பரிசுப்பொருட்களை வழங்கினர். ஒவ்வொரு காளையும் களத்துக்கு வரும் முன் ஒலிபெருக்கி மூலம், இந்த காளையை அடக்கினால் தங்கம், வெள்ளி, பணம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.

30 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த வீரர் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 22), காளையின் உரிமையாளர் கூலமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (46) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு மாலை 4.15 மணிக்கு நிறைவடைந்தது.

இதையொட்டி ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story